பக்ரீத் விமர்சனம்

101
பக்ரீத் விமர்சனம்

நடிகர் -விக்ராந்த்
நடிகை-வசுந்தரா காஷ்யாப்
இயக்குனர்-ஜெகதீசன் சுபு
இசை-இமான்
ஓளிப்பதிவு-ஜெகதீசன் சுபு

நாயகன் விக்ராந்த் சில போராட்டங்களுக்குப் பிறகு கிடைத்த நிலத்தை வைத்து விவசாயம் செய்ய நினைக்கிறார். இதற்காக வங்கி கடனுக்காக அலைகிறார். பொருளாதார நெருக்கடியில் இருக்கும் விக்ராந்துக்கு அவரது மனைவி வசுந்தராவும், மகள் ஷ்ருத்திகாவும் தான் உலகம்.

ஒருநாள் கடன் கேட்பதற்காக இசுலாமியர் வீட்டுக்கு செல்லும் போது பக்ரீத்துக்காக கொண்டு வரப்பட்ட ஒரு ஒட்டகத்தின் குட்டியை இரக்கப்பட்டு வீட்டுக்கு கொண்டுவருகிறார் விக்ராந்த். அந்த ஒட்டகம் அவர்களது குடும்பத்தில் ஒருவராகவே மாறிவிடுகிறது.

இந்நிலையில், ஒட்டகத்திற்கு உடல் நலம் சரியில்லாமல் போக, விலங்கு நல மருத்துவர் எம்.எஸ்.பாஸ்கர் அறிவுரையால் திரும்ப ராஜஸ்தானில் ஒட்டகங்களுடன் ஒட்டகமாக விட்டுவிட செல்கிறார் விக்ராந்த்.

இந்த பயணத்தில் விக்ராந்த் சில இன்னல்களை சந்திக்கிறார். இதையெல்லாம் கடந்து ஒட்டகத்தை சேர்த்தாரா? இல்லையா? என்பதே படத்தின் கதை.

படத்தில் நாயகனாக நடித்திருக்கும் விக்ராந்த், எதார்த்தமான நடிப்பால் மனதில் நிற்கிறார். கடனுக்காக அலைவது, மகளுடன் பாசத்தை காட்டுவது, ஒட்டகம் மீதான அன்பு, அதை பிரிந்த பின்னர் பரிதவிப்பு என நடிப்பில் பளிச்சிடுகிறார். இப்படம் விக்ராந்திற்கு பெயர் சொல்லும் படமாக அமைந்திருக்கிறது.

நாயகியாக நடித்திருக்கும் வசுந்தரா சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். பல காட்சிகளை சாதாரணமாக செய்து விட்டு செல்கிறார். ஒரு விவசாயி மனைவியாக சிறப்பாக பிரதிபலித்துள்ளார். பேபி ஷ்ருத்திகாவின் நடிப்பால் படம் நமக்கு இன்னும் நெருக்கமாகிறது.

விக்ராந்தின் நண்பராக தினேஷ், லாரி டிரைவராக வரும் ரோகித் பதக், லாரி உதவியாளராக வரும் மோக்லி, ஆகியோர் திரைக்கதையோட்டத்திற்கு பெரிதும் உதவியாக இருந்திருக்கிறார்கள். ஒட்டகத்தை விற்று காசு பார்க்கலாம் என்ற ஆசையில் அதை ஏற்றிவிட்டு அதனால் தொல்லைகளுக்கு ஆளாகும் ரோகித் சிரிக்க வைக்கிறார்.

அன்பை மட்டுமே பிரதானமாக எடுத்து படத்தை இயக்கி இருக்கிறார் இயக்குனர் ஜெகதீசன் சுபு. குறிப்பாக கதாபாத்திரங்களிடையே சிறப்பாக வேலை வாங்கி இருக்கிறார்.

விலங்குகளை வைத்து படம் எடுக்க ஒரு தைரியம் வேண்டும். அதுவும் இந்த படத்தில் ஒட்டகத்திடம் வேலை வாங்கி இருக்கிறார் இயக்குனர். படம் பார்க்கும் போது, நம்மளுடைய செல்ல பிராணிகளுடன் நாம் இருப்பதை பல இடங்களில் நினைவு படுத்துகிறார்.

ஒட்டுமொத்தமாக விலங்குகள் மீதான பேரன்பை பக்ரீத் பேசியிருப்பது சிறப்பு. அதை வெறும் ஆவணமாக பதிவு செய்யாமல் நம்மையும் சாராவோடு சேர்ந்து பயணிக்க வைத்ததில் ஜெகதீசன் சுபு கவனிக்க வைக்கிறார்.

படத்தின் இன்னொரு நாயகன் இமானின் இசை தான். கதாபாத்திரங்களின் உணர்வுகளை இசையால் கடத்துகிறார். ஆலங்குருவிகளா, லக்கி லாரி, கரடு முரடு ஆகிய பாடல்களும் முன்பே வெளியாகி ஹிட் அடித்து விட்டன.
தமிழ்நாட்டின் வயல்புறம் முதல் ராஜஸ்தான் பாலைவனம் வரை ஜெகதீசன் சுபுவின் ஒளிப்பதிவு நம்மையும் சேர்த்து பயணிக்க வைக்கிறது.

மொத்தத்தில் ‘பக்ரீத்’ குடும்பங்களின் கொண்டாட்டம்.