தமிழ் திரையுலகை வியக்க வைத்த தீபிகாவுடன் ஒரு சந்திப்பு

110

ஆறடி படத்தில், வெட்டியாளாக நடித்து, தமிழ் திரையுலகை வியக்க வைத்தவர், தீபிகா. அவர் தனது திரையுலக அனுபவம் குறித்து இவ்வாறு பேசுகிறார்,

இப்படியொரு கதாபாத்திரம் எப்படி அமைந்தது?

தொலைக்காட்சி செய்தி வாசிப்பாளராக இருந்த போது, ‘லஷ்மி கல்யாணம்’ என்ற தொடரில் நாயகியாக நடிக்கும் வாய்ப்பு கிடைத்து. அதைத் தொடர்ந்து, ஆறடி படத்தில் வெட்டியாளாக நடிக்க கேட்டனர். இதுவரை யாரும் நடிக்காத வித்தியாசமான பாத்திரமாக இருந்ததால் சம்மதித்தேன்.

உங்கள் குடும்பத்தை பற்றி?

சொந்த ஊர் கடலுார் மாவட்டம், பண்ருட்டி. அப்பா, பி.எஸ்.என்.எல்.,லில் வேலை பார்க்கிறார். எங்கள் குடும்பத்தில் சினிமா பின்னணி உள்ளவர்கள் யாரும் இல்லை.

அப்பாவிடம் நடிக்க சம்மதம் எப்படி வாங்கினீர்கள்?

செய்தி வாசிப்பாளராக இருந்த போதும் சரி, ‘டிவி’யில் நடிக்க சென்ற போதும் சரி; வீட்டில் யாரும் சம்மதிக்க வில்லை. பலமுறை அவர்களிடம் எடுத்துச் சொல்லி, சம்மதம் பெற்றேன். ஆறடி படத்தில், என் பாத்திரத்தை பற்றி கேட்டதும், ‘நடிக்கவே கூடாது’ என்றனர். முதல் படத்திலேயே இந்த மாதிரி வாய்ப்பு கிடைக்காது என, எடுத்துச் சொல்லி, சம்மதம் வாங்கினேன்.

படத்தில் நடித்த அனுபவம் எப்படி இருந்தது?

உச்சி வெயிலில், காலில் செருப்பு கூட அணியாமல், சுடுகாட்டில் நடித்தது, பயங்கர அனுபவமாக இருந்தது. காலில் முள்குத்தி, ரத்தம் வடிய நடித்தேன். ஒரு காட்சியில், அப்பா, தம்பி இறந்து விட, நான் அழுது புலம்ப வேண்டும். இதை படமாக்கும் போது, என் பெற்றோரும் உடன் இருந்தனர். நான் நடித்ததை பார்த்து, அவர்களும் அழுதனர்.

எந்த மாதிரி படங்களில் நடிக்க ஆர்வம்?

ஹீரோவுடன் இணைந்து, டூயட் பாடி நடிப்பதை விட, நம் திறமையை வெளிப்படுத்தக்கூடிய எதார்த்தமான படங்களில் நடிக்க ஆசை.

உங்களது ரோல்மாடல்?

ஸ்ரீதேவி.

எந்த நடிகருடன் நடிக்க ஆசை?

அஜித் ரொம்ப பிடிக்கும். விஜய் சேதுபதியின் நடிப்பை பலமுறை கூர்ந்து கவனித்துள்ளேன். என்னை கவர்ந்த நடிகர்களில் அவரும் ஒருவர்.

சினிமா பின்னணி இல்லாமல் நடிக்க வந்த அனுபவம்?

சினிமா பின்னணி உடையவர்கள், குடும்பத்தில் இருந்தால், சினிமா பற்றிய புரிதல், வழிகாட்டல் அனைத்தும் இருக்கும். ஆனால், நான் புதிது என்பதால், அனைத்தையும் பலமுறை யோசித்து செய்ய வேண்டியுள்ளது.

திரையுலகினரின் சமூக ஊடக ஆர்வம் குறித்து?

திரையுலகில் இருப்பவர்களுக்கு கண்டிப்பாக விளம்பரம் மிகவும் அவசியம். ஏதாவது ஒரு வகையில், மக்கள் மனதில் இருந்து கொண்டே இருக்க வேண்டும். அதற்கு சமூக ஊடகங்கள் பெரிதும் உதவியாக உள்ளன.

காதல் திருமணமா?

கண்டிப்பாக காதல் திருமணம் தான். பெற்றோர் பார்க்கும் மாப்பிள்ளையை தேர்ந்தெடுத்தால், சண்டை வந்தால் கூட, அது தொடர்ந்து கொண்டே இருக்கும்.